திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தஞ்சை மேயரை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருச்சி

தஞ்சை மேயரை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

திருச்சி மாநகராட்சி கூட்ட மன்றத்தில் மாமன்ற சாதாரணக்கூட்டம் நேற்று காலை நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, அனுசுயா ரவிசங்கர் ஆகியோர் எழுந்து கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள் தந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சன்.ராமநாதன் ஒருமையில் பேசி இருக்கிறார். அவரை கண்டிப்பதாக கூறி, ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியலிட முயன்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து தேவையற்ற விஷயங்களை பற்றி இங்கே பேசக்கூடாது என்று கூறினர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தஞ்சை மேயரை கண்டித்து அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து கவுன்சிலர் அரவிந்தன் கூறும்போது, திருச்சி மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

5-வது வார்டு கவுன்சிலர் அப்பீஸ்முத்துக்குமார் (ம.தி.மு.க.) :- திருவானைக்காவல் மெயின்ரோட்டில் கோவிலுக்கு செல்வதற்கான வழியை சுட்டிக்காட்டும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தவித்து வருகிறார்கள். ஆகவே அங்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். திருவானைக்காவலில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு வசதியாக பொதுசுவரொட்டி பலகை வைக்க வேண்டும்.

பொழுதுபோக்கு பூங்கா

12-வது வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வன்:- திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கலைஞர்அறிவாலயம் அருகே நீரேற்று நிலையம் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

28-வது வார்டு கவுன்சிலர் பைஸ்அகமது:- தென்னூர் அண்ணாநகரில் தேங்கி கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்து, பொழுதுபோக்கு பூங்காவோ, விளையாட்டுக்கூடமோ அமைத்து தர வேண்டும். தென்னூர் பாலத்தின் கீழ்பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள காவல் உதவி மையத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தென்னூர் பாலத்தில் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது அதை சீரமைக்க வேண்டும்.

கவுன்சிலர்களுக்கு அலுவலகம்

39-வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்:- வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை அதிகமாக மண்டி கிடக்கிறது. அவற்றை அகற்ற வேண்டும். அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு அலுவலகமும் கட்டி தர வேண்டும். மாமன்ற உறுப்பினர்களின் நிதியை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

41-வது வார்டு கோவிந்தராஜன்:- திருவெறும்பூர் கடைவீதியில் மழைநீர் வடிகால்கள் கட்டி தர வேண்டும்.

43-வது வார்டு செந்தில்:- தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சியை மேம்படுத்துவதற்காக அமைச்சரிடம் கூறி கூடுதல் நிதியை பெறுவதற்கு மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்வாடகைக்கு விடப்படும் கடைகள்

20 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த வாடகையில் பெற்ற மாநகராட்சிக்கு கடைகளை ஒருசிலர் தற்போது உள்வாடகைக்கு விட்டுள்ளதாக கவுன்சிலர் ஒருவர் கூறினார். அதற்கு மேயர் பேசுகையில், மாநகராட்சி கடைகளை யாராவது உள்வாடகைக்கு விடுகிறார்களா? என ஆய்வு நடத்தப்படும். அவ்வாறு உள்வாடகைக்கு விட்டு இருப்பது தெரிந்தால் அந்த கடைகள் கையகப்படுத்தப்படும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது என்றார்.

தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும். குடிநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். பாதாள சாக்கடை, கூடுதல் மின்விளக்குகள், தார்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

------------------------------------------------------------


Next Story