தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பெண்களுக்கு சேலை வழங்கியும் கொண்டாடினர்.
மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளா டாக்டர் ராஜ்சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி, மத்திய வடக்கு பகுதி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சியிலும் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
ஏரல்- தென்திருப்பேரை
ஏரல் காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தென்திருப்பேரையில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்
சாயர்புரம் மெயின் பஜாரில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் துரைசாமி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அ.தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், நகர அவைத்தலைவர் கனகராஜ் கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி அருகில் நகர பொருளாளரும், ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான காசி விஸ்வநாதன் கொடியேற்றி இனிப்பு வழக்கினார்.
சாகுபுரம் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனையின்பேரில், அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்புள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் அலங்காரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.