அ.தி.மு.க. பொதுச்செயலாளர்"எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும்": அர்ஜூன் சம்பத்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும்” என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்று இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.
துண்டுபிரசுரம்
தூத்துக்குடியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடைபெற உள்ள சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல் குறித்த துண்டுப் பிரசுரத்தை திருச்செந்தூர் திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தனி மாநிலம்
தமிழகத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. நிர்வாகம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாகவும், கொங்கு மண்டலத்தை ஒருங்கிணைத்து மற்றொரு தனி மாநிலமாகவும் உருவாக்க வேண்டும். இதனால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையும். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
சட்ட நடவடிக்கை தேவை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் லஞ்ச ஊழல் பட்டியலிலை மட்டும் வெளியிட்டால் போதாது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து வன்கொடுமை தாக்குதல் நடந்து வருகிறது. வேங்கைவயல் பகுதியில் தண்ணீரில் மலம் கலந்தவர்கள் மீது இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்க வேண்டும்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது தலைமையை ஓ.பன்னீர்செல்வம் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பா.ஜ.க. அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையேல் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக ஜெயலலிதா வெற்றி பெற்றபோது ஜானகி கட்சியை விட்டுக் கொடுத்து சென்றார். அதுபோல் எடப்பாடி பழனிசாமி வெற்றியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டு, விட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.