அ.தி.மு.க.வினர் 12 இடங்களில் சாலைமறியல்; 747 பேர் கைது


அ.தி.மு.க.வினர் 12 இடங்களில் சாலைமறியல்; 747 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2022 1:00 AM IST (Updated: 20 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூரில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ஓமலூர்:-

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூரில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி கைது

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தடையை மீறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், ஆத்தூர் பஸ் நிலையம் முன்பு சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் நகர செயலாளர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, ஆத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், நரசிங்கபுரம் நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளிசாமி மற்றும் நிர்வாகிகள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க.வினரை கைது செய்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

செல்லியம்பாளையத்தில் சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

ஓமலூர்,

இதேபோல் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பல்பாக்கி கிருஷ்ணன் தலைமையில் ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தர்மபுரி-சேலம் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஓமலூர் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஓமலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து, காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சேரன் செங்குட்டுவன், ஓமலூர் நகர செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் மல்லிகா, ஓமலூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா சக்திவேல், செல்வமணி வெங்கடாஜலம், சரவணன், கஸ்தூரி விஜயா பெரியசாமி, ரமேஷ், செந்தில், சுதா அய்யனார், முன்னாள் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் தளபதி, காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் சந்தானம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைது செய்து தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக, தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காடையாம்பட்டி

இதேபோல் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி, ஒன்றிய இணை செயலாளர் கோகிலா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தேஸ்வரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன், நகர பேரவை செயலாளர் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் சுகன்யா, பசுபதி, ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டு தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

ஏற்காடு, எடப்பாடி

ஏற்காடு பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் முதல்-அமைச்சர், சபாநாயகரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி, எடப்பாடி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் ஏ.எம் முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர். கொங்கணாபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்தனர்.

வாழப்பாடி

வாழப்பாடி பஸ் நிலையம் அருகே, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழப்பாடி நகர செயலாளர் சிவக்குமார், பேளூர் நகர செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story