கலவை பேரூராட்சியில் தலைவர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டம்
கலவை பேரூராட்சியில் டெண்டர் பிரிக்கப்படாததை கண்டித்து பேரூராட்சி தலைவர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.2¾ கோடிக்கு டெண்டர்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க. வை சேர்ந்த கலா சதீஷ் இருந்து வருகின்றார். பேரூராட்சியில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 8 பேரும், தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேரும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் பேரூராட்சியில் 7 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஆன்லைன் மூலம் ரூ.2 கோடியே 87 லட்சத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த ஆதம் பாஷா, அ.தி.மு.க.வை சேர்ந்த சேதுராமன் ஆகிய இருவரும் மேற்கண்ட வேலைக்கு ஆன்லைன் மூலமாக டெண்டர் போட்டுள்ளனர். 10 நாட்களாகியும் இதுவரை டெண்டரை பேரூராட்சி அதிகாரிகள் பிரிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதனால் கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் நீலாவதி தண்டபாணி, கலவை நகர செயலாளர் சதீஷ், திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் துறையூர் குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் அமானுல்லா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தாமோதரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காமராஜ், தினேஷ், நித்யா சக்தி, மணிகண்டன், யுவராஜ், நேதாஜி, பிரபு, மாவட்ட மாணவரணி தலைவர் பிரபு மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.