ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தாயார் சில நாட்களுக்கு முன்பு காலமானார். நேற்று அவருடைய இல்லத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்சினைகளில் கூட எந்த முடிவும் எடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக தி.மு.க. அரசு செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.