நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி -எடப்பாடி பழனிசாமி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி -எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல்,

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

வழக்கு போடுவார்கள்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக எதிர்த்து ஓட்டுப்போட்டவர்தான், ஓ.பன்னீர்செல்வம். அதையெல்லாம் மறந்து எதிரிக்கு நாம் வழிவிட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஓட்டுப்போட்டவர்களை மீண்டும் இணைத்து, அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி, இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியை கொடுத்ததுதான் நாம்.

அதைக்கூட மறந்து தற்போது அ.தி.மு.க.வுக்கு துரோகம் விளைவித்தவரை என்னவென்று சொல்வது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள், தி.மு.க.வின் 'பி டீ'மாக செயல்படுகின்றனர். எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வை எதிர்க்க முடியாதோ, அப்போதெல்லாம் நம் மீது வழக்கு போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதைத்தான் செய்கிறார்கள். நேரடியாக அ.தி.மு.க.வை எதிர்க்க தெம்பு, திராணி இல்லாத கட்சி தி.மு.க. அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாது. கொல்லைப்புறமாக நுழைந்து, நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள்.

மெகா கூட்டணி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.

அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். அதற்கு இந்த கூட்டம் அச்சாணியாக விளங்குகிறது. அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டில் எதையும் நிறைவேற்றவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு மறதி அதிகம் என கருதுகிறேன்.

திராவிட மாடல்

எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான் இப்போதைய ஆட்சியாளர்கள் ரிப்பன் வெட்டி திறக்கிறார்கள். கடந்த 18 மாதத்தில் எந்த பெரிய திட்டத்தை கொண்டு வந்தீர்கள்?. அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனை. அதை தான் திராவிட மாடல் என்கிறார்கள். இந்த 18 மாதத்தில் மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள்.?

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வருகிறீர்கள். மாறாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய்யாக அவதூறு பிரசாரம் செய்கிறார். அதை கண்டிக்கிறோம். உண்மையை மறைக்க முடியாது. அதற்கு மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

மின்கட்டணம் உயர்வு

எங்கள் ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் கொடுத்தோம். மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் தற்போது மின் கட்டணம் 12 முதல் 53 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. அதை நாங்கள் கூறவில்லை. முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் நீக்கப்பட்டவர்கள் இணைவோம் என்று பேசுகிறார்கள். இணைப்பு என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருமனதாக அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அவரவர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள். பொதுக்குழு முடிவுதான் இறுதியான முடிவு.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Next Story