அ.தி.மு.க. நிர்வாகிக்கு மிரட்டல்; கார் கண்ணாடி உடைப்பு
அ.தி.மு.க. நிர்வாகிக்கு மிரட்டல்; கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சமயபுரம்:
லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சியில் உள்ள தத்தனூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் சூப்பர் நடேசன். இவர் லால்குடி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கும், லால்குடி அருகே உள்ள அலங்காநல்லூரை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளராக உள்ள சவுந்தர்ராஜன் என்பவரது மகன் விக்னேஷ்(வயது25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூப்பர் நடேசனை பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விக்னேஷ் தரக்குறைவாக பேசி வந்ததாகவும், இதனால் அவரை சூப்பர் நடேசன் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் சூப்பர் நடேசன் வீட்டின் முன் நின்று தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டின் வெளியே நின்ற கார் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சூப்பர் நடேசன் சமயபுரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் விக்னேஷ் உள்பட 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.