சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
x

சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 201 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் அ.தி.மு.க.வினர் 60 பேரை கைது செய்தனர். இதேபோல் ஆண்டிமடம் கடைவீதியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான மருதமுத்து தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்தார்.


Next Story