மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரியலூரில் உள்ள பஸ் நிலைய நுழைவு வாயிலில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 60 பேரை அரியலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, ஜெ.கொ.சிவா மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 55 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர் சுத்தமல்லி பெரியசாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. அரசு பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, அதனை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். திருமானூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.வினர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.