அதிகாரிகளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்


அதிகாரிகளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
x

அரசு ஒப்பந்த பணிகளை கேட்டு விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூனன் ஆகியோர் தலைமையில் கட்சியின் விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், விநாயகமூர்த்தி, ஒலக்கூர் பன்னீர், எசாலம் பன்னீர், நடராஜ், சதீஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வந்தனர். அங்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் இல்லாததால் அங்குள்ள பொறியியல் பிரிவுக்குச்சென்று அங்கிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டவாறு அமர்ந்தனர். பின்னர் அங்கிருந்த உதவி பொறியாளர் ஒருவரிடம், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2021-22-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில் அதில் அ.தி.மு.க.வினருக்கு எதற்காக பணிகள் வழங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டும், தங்களுக்கும் பணி வழங்கக்கோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், இதுபற்றி திட்ட இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இதுதொடர்பாக கோரிக்கை மனு எழுதிக்கொடுக்குமாறும் கூறினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி எங்களுக்கு வழங்கப்படவில்லை. எங்கள் தொகுதியில் எந்தெந்த கிராமங்களில் என்ன வளர்ச்சி பணிகள் நடக்கிறது என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. எனவே நேர்மையான முறையில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இத்திட்டத்தில் எந்தவித ஒளிவுமறைவின்றி பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு நேர்மையான முறையிலேயே நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story