51 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமி
51 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து மதுரை மாநாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை
51 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து மதுரை மாநாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. மாநாடு
அ.தி.மு.க. பொன்விழா ஆண்ைடயொட்டி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக வலையங்குளம் பகுதியில் 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைத்து ஏற்பாடுகள் நடைபெற்று, நேற்று கோலாகலமாக மாநாடு நடந்தது.
நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவியத்தொடங்கினர். நேற்று காலை அலை கடலென திரண்டனர்.
கொடியேற்றி தொடங்கிவைத்தார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைக்க காலை 8.45 மணிக்கு மண்டேலா நகர் பகுதிக்கு வந்தார். அந்த பகுதி ெதாண்டர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்ததால், அவரது வாகனம் முன்னே செல்ல முடியாமல் நின்றது.
காலை 9.10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தார். தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வை நிறுவி 51-வது ஆண்டை குறிக்கும் வகையில், 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பூக்கள் தூவிய ஹெலிகாப்டர்
அந்த நேரத்தில் பூக்கள் தூவுவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது. எடப்பாடி பழனிசாமி ெகாடியேற்றியதும் வானில் இருந்து சுமார் 1 டன் பூக்களை தூவியது. அது பூ மழையாக தொண்டர்கள் மீது விழுந்தது. திருச்செந்தூர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்டு இருந்த ஆள் உயர வெள்ளி வேல், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றினார்.
அவர் மாநாட்டு திடலை அடைந்தபோது, ஜெயலலிதா பாசறை தொண்டர்கள், சீருடையுடன் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர்.
மாநாட்டு திடலில் அ.தி.மு.க. ஆட்சி கால சாதனை விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பொற்கிழி-கலைநிகழ்ச்சிகள்
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். அதன்பிறகு, கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி, ரோபோ சங்கரின் டிரம்ஸ் நிகழ்ச்சி, மதுரை ராமரின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றிய பாடல்களை பாடினர்.
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், நடிைக விந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடந்தது.
ெதாண்டர்களுக்கு உணவு
காலை உணவு 7 மணி முதலும், மதிய உணவு பகல் 11.30 மணி முதலும் தொண்டர்களுக்கு உணவுக்கூடங்களில் பரிமாறப்பட்டது. உணவுகளை சமைக்க ஏ., பி., சி., என 3 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு சமையல் கூடம் திருமங்கலம்-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை இணைப்பு ரோடு அருகிலும், 2 சமையல் கூடங்கள் மாநாட்டு திடலுக்கு வலது புறமும் செயல்பட்டன.
450 சமையல் கலைஞர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இது தவிர, உணவுபரிமாற என கட்சியின் தன்னார்வல தொண்டர்கள் ஒவ்வொரு கூடத்துக்கும் நூற்றுக்கணக்கானோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
15 லட்சம் பேருக்கு உணவு தயாரிப்பதற்கு தேவையான அளவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு உணவு தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் இரவு முதல் நடந்து வந்தது. இந்த பணிகள் நேற்று மாலை 3 மணி வரை தொடர்ந்தது.
1 லட்சம் டன் அரிசி
ஒரு லட்சம் டன் அரிசியும், ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான காய்கறிகள் மற்றும் 3 ஆயிரம் கிலோ மிளகாய் தூள், 5 ஆயிரம் கிலோ மல்லித்தூள் என மசாலா பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது.
அத்துடன் உணவு தயாரிக்க தேவையான 1,700 வர்த்தக கியாஸ் சிலிண்டர்களில் நேற்று மதியம் 2 மணி வரை 1,200 சிலிண்டர்கள் தீர்ந்தன. நேற்று மதியம் வரை 3 உணவுக்கூடங்களிலும் தலா 10 லட்சம் தண்ணீர் பாட்டில்களுக்கும் (500 மி.லி.) அதிகமாக வழங்கப்பட்டிருந்தன. இதில் சி உணவுக்கூடத்தில் சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டு அனைத்து உணவுக்கூடங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டது. சமையல் கலைஞர்களுக்கான மேற்பார்வையாளராக கணபதி என்பவரும், ஒட்டு மொத்த உணவு ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை செய்யவும் முன்னாள் அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டிருந்தார்.
பவுன்சர்கள்
கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கட்டுப்படுத்தவும் தனியார் காவல் பணியாளர்கள் (பவுன்சர்கள்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மேடையின் இருபுறமும் நின்று கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அனுமதிக்கப்பட்ட பிரமுகர்களை தவிர வேறு யாரும் மேடையில் ஏறாத வகையில் பார்த்துக்கொண்டனர்.
மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றிலும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. அதாவது, தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, சென்னை நான்கு வழிச்சாலை, ரிங் ரோடு ஆகியவற்றில் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
மருத்துவ ஏற்பாடு
மாநாட்டு திடலில் 8 இடங்களில் முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உயிர்வாழ் கருவிகளுடன் கூடிய 8 ஆம்புலன்சுகளும், 2 சாதா ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. முதலுதவி மையம் குறித்த டிஜிட்டல் வரைபடம் (மேப்) மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர, கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது. 8 முதலுதவி மையங்களில் 50 டாக்டர்கள் மற்றும் நர்சுகள், மருந்தாளுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என மருத்துவ பணியாளர்கள் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மருத்துவ குழுவினரால் சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் தலைமையில் 4 முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழுவினர் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணி அளவில் மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்கின.