அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை: காதல் விவகாரத்தில் வாலிபர் வெறிச்செயல்


அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை: காதல் விவகாரத்தில் வாலிபர் வெறிச்செயல்
x

காதல் விவகாரத்தில் அ.தி.மு.க. ஊராட்சி தலைவரை வாலிபர் வெட்டிக்கொலை செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 55). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், அரவூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகன் சத்தியமூர்த்தி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி, அந்த பெண்ணை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்றாக தெரிகிறது.

காதல் விவகாரம்

இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பஞ்சாயத்தார்கள் பேச்சுவார்த்தை நடத்தி சத்தியமூர்த்தியிடம் இருந்து அந்த பெண்ணை பிரித்து அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

தனது தங்கையை காதலனுடன் வாழ விடாமல் தடுத்ததாக பன்னீர்செல்வத்தின் மீது அந்த பெண்ணின் சகோதரர் விஜய்(23) என்பவர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

சரமாரியாக அரிவாள் வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டையூர் பகுதியில் நண்பர்களுடன் பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த விஜய்(23), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பன்னீர்செல்வத்தை சரமாரியாக வெட்டினார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.


Next Story