அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். இதனால் மன்னார்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி:
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். இதனால் மன்னார்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்து வருகிறார்.
தற்போது மன்னார்குடி கீழ 6-ம் தெருவில் வசித்து வரும் இவர், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியை சேர்ந்த ஞானம்மாள் என்பவருக்கு சொந்தமான 10 கிரவுண்ட் நிலத்தை வாங்கி இருந்தார்.
அந்த நிலத்தை வாங்கும் போது போலியாக சில ஆவணங்களை கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக ஞானம்மாள் தரப்பில் அவருடைய மருமகள் ரோஸ்லின், கடந்த 2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஐகோர்ட்டில் ரோஸ்லின் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியதுடன் வழக்கு விசாரணையை விரைந்து முடிந்து 3 மாத காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் திடீர் சோதனை
இதனிடையே ஊராட்சி ஒன்றிய தலைவர் மனோகரன் உள்ளிட்ட சிலர் முன்ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மன்னார்குடி கீழ 6-ம் தெருவில் உள்ள மனோகரனின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை 9 மணி வரை நீடித்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?
வீட்டில் சோதனை நடத்தியதை தொடர்ந்து மன்னார்குடி கம்மாள தெருவில் உள்ள மனோகரனுக்கு சொந்தமான கட்டுமான ஒப்பந்த நிறுவன அலுவலகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். அங்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சோதனை நடந்தது. சி.பி.சி.ஐ.டி. தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் உள்பட 10 போலீசாரை கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
பரபரப்பு
அ.தி.மு.க.ைவ சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் நடந்த இந்த சோதனை காரணமாக மன்னார்குடி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.