அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். கட்சி பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர்.
இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்த விவரங்களை 31-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். சனாதனம் குறித்த எந்த விவரமும் தெரியாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். விலைவாசி உயர்வால் தி.மு.க. அரசு தோல்வியடைந்துள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் என்றார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். சனாதனத்தில் இருந்த பாதக அம்சங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் தி.மு.க.வினர் சனாதனத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், மாநில இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் தேன்மொழி எம்.எல்.ஏ., மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பாரதி முருகன், உதயக்குமார், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.