அ.தி.மு.க. வசம் இருந்த கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க.
அ.தி.மு.க. வசம் இருந்த கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
கடமலை-மயிலை ஒன்றியம்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க தலா 7 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த சில மாதங்களில் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரா சந்தோசம் கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவராக பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் கடமலை-மயிலை ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றியக்குழு தலைவர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பினர். இது தொடர்பான கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
போட்டியின்றி தேர்வு
இதில் ஒன்றியக்குழு தலைவர் தோல்வி அடைந்தார். இதற்கிடையே பல்வேறு காரணங்களால் துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெறாமல் இருந்தது. இதனால் கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் தலைவர் பதவிக்கு 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சித்ரா சுரேஷ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைவர் இருக்கையில் அமர வைத்து சால்வை போர்த்தினார். பின்னர் ஆனந்த கண்ணீருடன் சித்ரா சுரேஷ் பதவியேற்று கொண்டார்.
தி.மு.க. கைப்பற்றியது
அப்போது தி.மு.க. கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, துணை செயலாளர் தேசிங்குராஜன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நடைபெற்ற ஒன்றியக்குழு துணை தலைவருக்கான தேர்தலில் 3-வது வார்டு கவுன்சிலர் சேகரன், 10-வது வார்டு கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் சேகரன் தேர்தல் அதிகாரியிடம் இருந்த வேட்பு மனுவை பிடுங்கி கிழித்து வீசினார். இதனையடுத்து மறு தேதி அறிவிக்காமல் ஒன்றியக்குழு துணை தலைவருக்கான தேர்தலை தேர்தல் அலுவலர் தாமரைக்கண்ணன் ஒத்தி வைத்தார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. வசமிருந்த கடமலை-மயிலை ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது.