தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலைக்கோட்டை:
கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விலை உயர்வு, அரசுத்துறைகளில் ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், தி.மு.க.வின் 2 ஆண்டு கால ஆட்சியில் சகல துறைகளிலும் தமிழகம் பின் தங்கியிருக்கிறது. அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், அதற்கு முதல்-அமைச்சர் மத்திய அரசை காரணம் கூறுகிறார். பின்னர் தி.மு.க.வுக்கு எதற்கு ஆட்சியும், அதிகாரமும். அ.தி.மு.க. ஆட்சியிலும், இதுபோன்ற விலைவாசி உயர்வு ஏற்பட்டபோது, அரசின் துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
அமலாக்கத்துறை கரூர், விழுப்புரத்தை தொடர்ந்து திருச்சிக்கும் வரலாம் என்ற பேச்சு நிலவுகிறது. அரசின் எந்தத்துறையும் வேலை செய்யவில்லை. மாறாக டாஸ்மாக் துறை தான் 24 மணி நேரமும் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான சட்ட விரோத பார்கள் செயல்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடக்கிறது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தமிழக மக்களை வாழ வைக்க மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வரும், என்றார்.
மாவட்ட செயலாளர் குமார் பேசுகையில், தி.மு.க. அரசு 2 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு எதையும் செய்யவில்ைல. தங்களுக்கு எந்த பயனும் இல்லாத தி.மு.க. அரசை இனி எந்தத்தேர்தல் வந்தாலும், வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர், என்றார். வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசுகையில், தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் அமையும் அரசில் முக்கிய பங்கு வகிக்கும், என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.