பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேவர்சோலை, ஓவேலியில் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
சொத்து வரி, பால், மின் கட்டணம் உயர்வு மற்றும் கட்டுமான பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கி அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, பால், மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பொன் ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் அ.மில்லர், ஒன்றிய செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் சையத் அனூப்கான், பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.