தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க அரசை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க அரசை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், இதற்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
ஊழல்
அப்போது அவர் கூறுகையில், 'பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு இருண்ட ஆட்சியை தந்து கொண்டு இருக்கிறது. மதுபானங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தி.மு.க. அமைச்சர்கள்தான் நடத்தி வருகின்றனர். விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், அதனை விற்றவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கிய அரசு தி.மு.க. அரசு. மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்து உள்ளது என்று கூறுகிறார். உடனடியாக அவரை இலாகா மாற்றிவிட்டார்கள். இங்கு ஊழல் செய்து சேர்க்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல.
அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. தற்போது 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் மாநில அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வீரபாகு, கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஏ.எம்.ஆனந்தராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.