அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 8:30 PM GMT (Updated: 29 May 2023 8:30 PM GMT)

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டு வரும் உயிரிழப்பை தடுக்க தவறியதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் முறைகேடுகளை தடுக்க தவறியதை கண்டித்தும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிங்கை முத்து, பார்த்திபன், பீளமேடு துரை, பகுதி செயலாளர்கள் ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல ஓடுகிறது. இதை தடுக்கவில்லை. வருமானவரித்துறை சோதனைக்கு வந்த அதிகாரிகள் தாக்கப்படுகிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று உள்ளது முதலீடுகளை ஈர்க்க அல்ல, இன்ப சுற்றுலாதான். அவர் வந்த பின்பு முதலீடு எவ்வளவு வந்துள்ளது என்பதை பார்ப்போம்.

கள்ளச்சாராயத்தை குடித்து பலர் இறந்துபோனபோது தி.மு.க.கூட்டணியினர் வாய் திறக்க வில்லை. அவர்கள் முதல்-அமைச்சர் சொல்வதை வழிமொழிபவர்களாக மட்டுமே உள்ளனர் என்றார்.


Next Story