அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி 'சீல்' வைப்பு வருவாய்த்துறை நடவடிக்கை


அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைப்பு வருவாய்த்துறை நடவடிக்கை
x

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் சம்பவத்தையடுத்து, போலீசாரின் பரிந்துரையின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒரு புறம் நடைபெற, மற்றொருபுறம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சி அலுவலகத்தின் வெளியே இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் சரமாரியாக மோதிக்கொண்ட நேரத்தில், இந்த 2 கூட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் கட்சி அலுவலகம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே இருதரப்பு ஆதரவாளர்கள் மோதலால் கட்சி அலுவலகம் போர்களமானதால், எடப்பாடி பழனிசாமி வருகை தந்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும் என்பதை போலீசார் உணர்ந்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

ஒரு பொது சொத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அந்த சொத்தை சீல் வைப்பதற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145 பிரிவின் கீழ் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கும் முடிவை போலீசார் எடுத்தனர்.

இதுதொடர்பாக தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினியுடன் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை 'சீல்' வைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளுடன் நோட்டீஸ் தயார் செய்யப்பட்டது.

சட்டவிதிகள்

இதையடுத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பதற்காக போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 12.20 மணியளவில் வருகை வந்தனர். அப்போது கட்சி அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் இருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம், 'சட்டவிதிகளை விளக்கி கட்சி அலுவலகத்துக்கு 'சீல்' வைக்க போகிறோம். நீங்கள் விரைவில் இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கால அவகாசம் வழங்குகிறோம்' என்று கூறினர்.

பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகம் அருகே அமைந்துள்ள திருமண மண்டபத்துக்கு சென்று சிறிது நேரம் காத்திருந்தனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதியம் 12.35 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் தர்ணா

வருவாய்த்துறை அதிகாரிகளின் சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி அலுவலக வளாகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மதியம் 12.45 மணியளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர், கட்சி அலுவலகத்தில் இருந்து கணினி, மென்பொருள் சாதனங்கள், முக்கிய ஆவணங்களை எடுத்து விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் வாகனம் கட்சி அலுவலகத்தை விட்டு கடந்தவுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். பின்னர் அ.தி.மு.க. அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அலுவலகத்தின் பின்பக்க கதவு, முன்பக்க கதவு, முன்பக்க நுழைவுவாயில் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சீல் வைத்தனர்.

போலீசார் கட்டுப்பாட்டில்...

மின் இணைப்பு துண்டிப்பு, ஆவணங்கள், பொருட்கள் சரிபார்ப்புடன் மதியம் 1.50 மணிக்கு தொடங்கிய 'சீல்' வைக்கும் நடவடிக்கை மதியம் 2.10 மணியளவில் நிறைவடைந்தது. 'சீல்' வைத்ததற்கான நோட்டீசை ஒட்டிவிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்த போது, அந்த அலுவலகத்தின் உள்ளே கடந்த 35 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் நபரும், தூய்மை பணியை மேற்கொண்டு வந்த 3 பெண்களும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். தற்போது நாங்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை என்று அவர்கள் உருக்கமாக கூறி சென்றனர்.

முடிவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'இந்த கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் கட்சி அலுவலகத்துக்கு சென்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மரியாதை செலுத்துவோம்' என்று அழைப்பு விடுத்தார். ஆனால் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்ட தகவலையறிந்து எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வரும் முடிவை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story