அ.தி.மு.க. ஆட்சியில் தெருவிளக்குகள் அமைத்ததில் ஊழல் நாகர்கோவிலில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியில் தெருவிளக்குகள்   அமைத்ததில் ஊழல்  நாகர்கோவிலில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
x

அ.தி.மு.க. ஆட்சியில் தெருவிளக்குகள் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அ.தி.மு.க. ஆட்சியில் தெருவிளக்குகள் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

குமரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் நீலப்புரட்சி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள 140 விண்ணப்பதாரர்கள் உடனடியாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மாதத்துக்கு ஒரு வாரம் என்று கொடுக்காமல் தொடர்ச்சியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பல்வேறு நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல நூலகங்கள் கொண்டுவரப்பட உள்ளன. தமிழகத்தில் 145 சமத்துவபுரங்களில் மராமத்து பணிகள் செய்யப்பட உள்ளன.

இதற்காக 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 4 சமத்துவபுரங்கள் உள்ளன. இதில் 2 சமத்துவபுரங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மீதமுள்ள 2 சமத்துவபுரங்களில் அடுத்த ஆண்டு பணி நடக்கும்" என்றார்.

கூடுதல் சிறப்பு

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாட்டிலேயே நம்பர்-1 முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அவருடைய பணி சிறப்பாக உள்ளதாக அனைத்து வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தாலும் ஊரக வளர்ச்சி துறைக்கு கூடுதல் சிறப்பு உண்டு. ஏனெனில் இந்தத் துறையின் மூலமாக தான் கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முடிகிறது. முக்கியமாக கிராம மக்கள் நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்ந்து விட கூடாது என்பதே இந்த துறையின் நோக்கம் ஆகும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்தில் ரூ.18 கோடியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி கிடைத்துள்ளது. அந்த குடியிருப்புகள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் இன்னும் பல வீடுகள் கட்டி கொடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நூலகங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தையே மண்டபமாக அல்லது ஆஸ்பத்திரியாக மாற்ற முயற்சிகள் செய்தார்கள். எனவே இனி நூலகங்கள் புத்துயிர் பெற நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல்

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தியது. தோல்வி பயத்தில் அவர்கள் நடத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றனர்.

தமிழகத்தில் எல்.இ.டி. விளக்கு, உயர்கோபுர விளக்கு ஆகியவற்றை சரிசெய்ய கூடாது என்று உத்தரவு போட்டதாக கேட்கிறீர்கள். கடந்த ஆட்சியில் தெரு விளக்கு அமைத்தலில் ஊழல் நடந்துள்ளது. எனவே தான் தற்போது தெரு விளக்குகளை சரி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தெரு விளக்குகளை என்ன விலையில் வாங்குவது? எங்கிருந்து வாங்குவது? என்பது குறித்து அந்த குழு அறிக்கை அனுப்பியதும் உடனடியாக தெரு விளக்குகள் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது, மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பழங்குடியின மக்களுடன்...

இதேபோல் அமைச்சர் பெரிய கருப்பன் பேச்சிப்பாறையில் சமத்துவபுரத்தில் வசிப்பவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அரங்கை பார்வையிட்டார். அப்போது பொருட்களின் விற்பனை நிலவரங்கள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, திருவட்டார் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஆணையாளர் கீதா, பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், திருவட்டார் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜான்சன், மேற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின்பால்ராஜ், குலசேகரம் நகர செயலாளர் ஜெபித் ஜாஸ், ஒன்றிய பொருளாளர் ஜாண் எபனேசர், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு, மாவட்ட பிரதிநிதி சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story