அ.தி.மு.க. கல்வெட்டு திடீர் அகற்றம்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. கல்வெட்டு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை, மே.21-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. கல்வெட்டு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியிலிருந்து சிந்தாமணி பஜார் வழியாக சத்திரம் பஸ் நிலையம், மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து நந்தி கோவில் தெரு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அ.தி.மு.க. கல்வெட்டு அகற்றம்
அப்போது திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் அ.திமு.க. கல்வெட்டை அகற்றினர். இதை அறிந்தஅ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம், தி.மு.க. கொடி கம்பத்தை ஏன் அகற்றவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தி அ.தி.மு.க.கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கினர். அதன்பின் அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதேபோல் பா.ஜ.க.கொடிகம்பமும் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பா.ஜ.க.வினர் அங்கு திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பா.ஜ.க. கொடி கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தசம்பவத்தால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.






