அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது என கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிடவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் தி.மு.க. அரசு பொய்யை சொல்லி 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்து விட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்கிறார். அவர் 505 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம். 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினால் போதும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். நீட் தேர்வால் தொடர்ந்து மாணவ, மாணவிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அன்று ஒரு மாணவி மரணத்தை வைத்து அரசியல் செய்த தி.மு.க. இன்று ஆட்சியில் இருக்கிறது. 1¼ ஆண்டுகள் ஆகியிருக்கிறது நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.கல்வி கடன் ரத்து, மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாக கூறினார்கள், கொடுக்கவில்லை. மின்கட்டண உயர்வை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மீது பழியைபோட்டுவிட்டு, மின்கட்டண உயர்வு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்டர் வாடகை மாதம் ரூ.60, அடுத்து ஸ்மார்ட் மீட்டர் வருகிறது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல், மின்மிகை மாநிலமாக இருந்தது. தி.மு.க. ஆட்சி வந்ததும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது. அடுத்த வருடம் இன்னும் அதிகமாகதான் இருக்கும். இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு ஊழல் செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட மின்வெட்டு. ஏழை, எளிய மக்கள் மீது மின்கட்டண உயர்வை அறிவித்திருக்கிற தி.மு.க. அரசு, மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.இதேபோல் வீட்டுவரி உயர்வை 150 சதவீதம் உயர்த்தினார்கள். அடுத்து மக்களுக்கு போக்குவரத்து கட்டண உயர்வு காத்து கொண்டிருக்கிறது. 1¼ ஆண்டுகளில் 12 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு இந்த தி.மு.க. அரசு. கரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் சுலபமாக கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரிகள், 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகள் நிறுத்தப்படுகிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துகுமார், கரூர் மாநகர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மருத்துவரணி செயலாளர் தர்மேந்திரன், நகர செயலாளர்கள் கே.சி.எஸ்.விவேகானந்தன், மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.கே.செல்வகுமார், ஈஸ்வரமூர்த்தி, கலையரசன், விஜயவிநாயகம், கருணாகரன், சந்திரசேகர், இளங்குமரன், ரெங்கசாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story