அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: நாளை விசாரணை - சென்னை ஐகோர்ட்டு


அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: நாளை விசாரணை - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 22 Aug 2022 11:26 AM IST (Updated: 22 Aug 2022 11:46 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தொடுத்தார்.பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ''எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இதனை விசாரித்த நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர்.

இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடுத்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நாளைய தினம் இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்டு.இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வர உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.


Next Story