அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தகவல்


அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தகவல்
x

அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

வேலூர்

அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

எஸ்.ஆர்.கே.அப்புவுடன் சந்திப்பு

வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர். அவரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. வேலூர் ஜெயிலில் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.பாலசந்தர், பி.எஸ்.பழனி மற்றும் பலர் உடன் சென்றனர்.

பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

பொதுக்குழு நடந்தே தீரும்

வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார். பொதுக்குழு நடத்த தடையில்லை என்று கூறியிருக்கிறார்.

பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை எடப்பாடி கே.பழனிசாமி வளைப்பதாக டி.டி.வி. தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று, சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர். அவர் கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.

சசிகலா பாவம். நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையான எதிர்க்கட்சி அ.தி.மு.க. தான். கட்சியில் உள்ள உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது. இவர்கள் எல்லாம் கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்ப வாதிகள். விரக்தியில் பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story