அதிக வட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது


அதிக வட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
x

குளித்தலையில் அதிக வட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர்

வியாபாரிக்கு மிரட்டல்

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரை சேர்ந்தவர் மருதைவீரன் (வயது 47). வாழைக்காய் வியாபாரம் செய்து வரும் இவர் பழக்கடை வைப்பதற்காக தோகைமலை அருகே உள்ள பாலசமுத்திரபட்டி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பழனிச்சாமி (55) என்பவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ‌.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக நிலப்பத்திரம், வங்கி காசோலை, ப்ரோ நோட் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.இந்தநிலையில் மருதை வீரன் வட்டியும் முதலுமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி கொடுத்துள்ளார். இதையடுத்து கடன் பெற்றதற்கான ஆவணங்களை வழங்குமாறு பழனிச்சாமியிடம் மருதைவீரன் கேட்டுள்ளார். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால் தான் ஆவணங்களை திருப்பி தருவதாக அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பிரமுகர் கைது

நேற்று முன்தினம் மருதைவீரன் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற பழனிச்சாமி, அவரது மகன் கண்ணதாசன் உள்ளிட்ட சிலர் மருதைவீரனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மருதைவீரன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிக வட்டி கேட்டு வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் பழனிச்சாமியை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கண்ணதாசனை வலைவீசி தேடி வருகின்றனர். பழனிச்சாமி மனைவி வசந்தா கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story