''தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும்''-இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி


தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும்-இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
x

‘‘தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

புதுக்கோட்டை

இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயணத்தை இந்து முன்னணி சார்பில் அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடந்த மாதம் 28-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்கினார். இந்த பிரசார பயணம் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தது. புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், ''தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி நீடிக்குமா? என தெரியவில்லை. பலவிதமான தகவல்கள் வந்தபடி உள்ளது. தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அந்த அதிகாரிகளை பார்த்துக்கொள்ளலாம். இந்துக்கள் உரிமை மீட்க பிரசார பயணத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர், பழனி முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது'' என்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தை 2-ஆக பிரிப்போம் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்து. தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என ஆ.ராசா, ஜெகத் கஸ்பர் கூறியதின் பின்னணியில் சீனா உள்ளது. கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். கோவில் நிலங்களை மீட்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story