அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்துவதா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ்


அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்துவதா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ்
x

கோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக அ.தி.மு.க. கொடி, பெயரை பயன்படுத்தியதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சென்னை,

உண்மையான அ.தி.மு.க. யார்? என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'வீதிக்கு வந்து தனிக்கட்சி நடத்த தைரியம் இருக்கிறதா?' என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் பெயர் மற்றும் கொடியை அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தினர்.

வக்கீல் நோட்டீஸ்

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமை அலுவலக முகவரியுடன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் முகவரி மற்றும் பெரியகுளத்தில் அவரது நிரந்தர முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என குறிப்பிட்டு கட்சியின் லெட்டர்பேர்டை மோசடியாக பயன்படுத்தி வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் கூட்டம் நடத்தி உள்ளீர்கள்.

குற்றச்செயல்

கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பாளர் என மோசடியாக அறிவித்துள்ளீர்கள். அ.தி.மு.க. தலைமை கழகத்தின் முத்திரையையும் போலியாக உருவாக்கி பயன்படுத்தி உள்ளீர்கள்.

இப்படி செயல்பட்டுள்ளது முழுக்க முழுக்க குற்றச்செயலாகும். இது, தண்டனைக்குரிய செயலாகும். அதே நேரத்தில் பொதுமக்களையும் தவறாக வழி நடத்தியுள்ளீர்கள். அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச்செயலாளரிடமே உள்ளது.

திரும்ப பெற வேண்டும்

கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு இதனை உறுதிபடுத்துகிறது. எனவே அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.

எனவே, அ.தி.மு.க. பெயரை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். வேப்பேரியில் கூட்டம் நடத்துவதற்காக அ.தி.மு.க. தலைமையகத்தின் பெயரில் நீங்கள் வெளியிட்ட சட்டவிரோத அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இல்லாதபட்சத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி செயல்பட்டுள்ளதாக கூறி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story