அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்- நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு இல்லை-டி.டி.வி.தினகரன் பேச்சு


அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்- நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு இல்லை-டி.டி.வி.தினகரன் பேச்சு
x

அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்- நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு இல்லை-டி.டி.வி.தினகரன் பேச்சு

மதுரை

அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர் என்றும், நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பு இல்லை எனவும் மதுரை கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

எடப்பாடி அணியினர் அச்சம்

மதுரை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் செயல்வீரர்கள், ஆலோசனை கூட்டம் மதுரை சிந்தாமணி ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கன்னியாகுமரி முதல் ஒசூர் வரை 234 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். தொண்டர்களை வைத்து ஜெயலலிதாவின் பெயரிலேயே அ.ம.மு.க. செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த தலைமை பதவியை பணம் கொடுத்து தற்போது வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் குடுமிபிடி சண்டை போட்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க. கம்பெனி போல ஆகிவிட்டது. யார் அதிகமாக முதலீடு செய்கிறாரோ அவர் தலைமையாகிவிடலாம். எடப்பாடி பழனிசாமி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் எந்த வழக்கில் சிறைக்கு செல்ல போகிறமோ என்ற அச்சத்துடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இருந்து வருகின்றனர்.

பதவியை காப்பாற்ற..

அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவின் ஆட்சியை தர மாட்டார்கள். வினை விதைத்தவர்கள். வினை அறுப்பான் என்ற நிலையை தான் அனுபவிப்பார்கள்.

நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை. நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலேயே அழிந்துபோவார்கள். பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர்.

5 ஆண்டில் 3 பொதுச்செயலாளரை மாற்றி விட்டார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் யோசிக்க தொடங்கி விட்டார்கள்.அ.தி.மு.க.வை மீட்டெடுப்பவர்கள் அ.ம.மு.க.வினர் தான். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என நான் எண்ணுகிறேன். ஆகஸ்டு 15-ந்தேதி அ.ம.மு.க. பொதுக்குழு, செயற்குழு நடைபெறவுள்ளது. நாம் யாருக்காகவும் பின்வாங்க போவதில்லை.

யாரோடும் சமரசம் செய்வதில்லை. அ.ம.மு.கவின் ஆட்சியின் மூலம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதற்காக அரும்பாடு பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பேராசிரியர் மா.ஜெயபால், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் செ.சரவணன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, அணி ஒன்றிய, பகுதி, வட்ட, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அ.ம.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story