அ.தி.மு.க. மாநாட்டில் குடும்பம் குடும்பமாக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி அழைப்பு
ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டில் குடும்பம் குடும்பமாக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு வருகின்ற ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் கம்பீரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டும், ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதைக் கண்டும், உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்காக, அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் நலனுக்காகத் தங்களையே அர்ப்பணித்த மகத்தான தலைவர்களின் வழியில் சமத்துவ, சமதர்ம சமுதாயம் உருவாகிடப் பாடுபடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
நம்முடைய கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, மீண்டும்அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு நான் பணியாற்றி வருகிறேன்.
வாஞ்சையுடன் அழைக்கிறேன்
பல்வேறு மாவட்டங்களுக்கு கட்சி பணிகள் நிமித்தமாக நான் செல்லும்போது, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது. தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறேன்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு இடங்களில் இருந்தும், நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, தேவையான வாகனங்களை முன்கூட்டியே பதிவு செய்திட வேண்டும். ஆகவே, ``மதுரை, வலையங்குளம் ரிங்ரோடு, கருப்பசாமி கோவில் எதிரில்'', வருகிற ஆகஸ்டு20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.