மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

மணிமுத்தாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி கல்லிடைக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கார் பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி அம்பை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், அம்பை சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கூனியூர் மாடசாமி, கல்லிடைக்குறிச்சி முன்னாள் நகர செயலாளர் சங்கரநாராயணன், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரன்மாதேவி மாரிசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு ராமையா, சேரன்மாதேவி பழனிக்குமார், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் கிறாஸ் இமாகுலேட், மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின் உள்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் கார்த்திக் நன்றி கூறினார்.

தூர்வாரும் பணி

பின்னர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கூறும்போது, 'மணிமுத்தாறு அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே பெருங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் தற்போது சுமார் 60 அடி இருக்கும்போது கடந்த காலங்களைப் போல் ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அணையில் இருந்து குடிநீருக்காக 350 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதிலிருந்து சுமார் 40 கனஅடி பெருங்கால் பாசனத்திற்கு கொடுத்தாலே போதும். இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மேலும் கால்வாய்களில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே தூர்வார வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை. அதனால்தான் எனது சொந்த செலவில் கன்னடின் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்காவிட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி இப்பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றார்.



Next Story