அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
அ.தி.மு.க. தொடக்க விழா
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் 51-வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மின்கட்டணம்
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் தி.மு.க. சட்டப்பேரவை தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக தேர்தலின் போது அறிவிக்கப்பட்டு நிறைவேற்றவில்லை.
மாறாக சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்த்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியின் போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஜெயலலிதா அறிவித்த இருசக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தியது.
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு
தற்போது பால் விலையை லிட்டருக்கு ரூ.12-ம், பால் மதிப்புக்கூட்டு பொருட்களின் விலை 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. எல்லா நிலைகளிலும் தோல்வி சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் குண்டு வெடித்திருந்தால் சுமார் 500 பேர் உயிர் இழந்திருப்பார்கள்.
காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையில் ஏதாவது புகார் கொடுத்ததால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சந்துக்கடைகளில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டது.
வெற்றி பெறும்
தி.மு.க. கூட்டணி கட்சியின் தலைவர்கள் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை இல்லாதவர்களாக உள்ளனர். இதனால் நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது. இத்தகைய கூட்டணி கட்சியினரை தமிழக அரசு எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான சூழ்நிலையில் அ.தி.மு.க.வினர் தங்களது பணியை துரிதப்படுத்துங்கள், அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையானதை அறிந்து உதவுங்கள். வாக்காளர்கள் நம் மீது அன்புடன் தான் இருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் அவர்கள் மாற்றி வாக்களித்ததை தவறு என உணர்கிறார்கள். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே, இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், கூட்டுறவு பால் ஒன்றிய தலைவர் குப்புசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஜெயா ஆஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.