பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. உறவு முறிவில் மாற்றம் இல்லை -எடப்பாடி பழனிசாமி பேட்டி


பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. உறவு முறிவில் மாற்றம் இல்லை -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

பா.ஜனதா உடனான கூட்டணி முறிவில் எந்த மாற்றமும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். தொடர்ந்து எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை பயணிகள் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி முறிவு என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கடந்த மாதம் 25-ந்தேதி அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பா.ஜனதா கட்சியுடனான கூட்டணி விலக்கி கொள்ளப்பட்டதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அ.தி.மு.க. வெளியேறி உள்ளது. இது பா.ஜனதா தலைமையில் இருந்து ஏற்பட்ட அழுத்தத்தினாலோ, தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த நிர்ப்பந்தத்தினாலோ ஏற்பட்ட முடிவல்ல.

உள்நோக்கம்

தமிழக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தொண்டர்களின் மனதை பெருமளவில் காயப்படுத்தியதன் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பா.ஜனதா மாநில தலைவரை பதவியில் இருந்து விலக்க நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை.

அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த நிகழ்வு, அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தவும், அப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழல் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும் நோக்கிலேயே கலந்து கொண்டனர். இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

தமிழக மக்கள் பாதிப்பு

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு நாடகம் என தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. உண்மையில் இந்தியா கூட்டணி தான் ஒரு நாடகமாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணிக்கு முரணான கருத்துகள் எழுந்து வருவது அனைவரும் அறிந்தது.

அதேபோல் கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்டவற்றால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கூட்டணியில் புதிய கட்சிகள்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள். இதன்மூலம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

ஆசிரியர்கள் போராட்டம்

தொடர்ந்து பல நாட்களாக சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்ததை போல் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை கேட்பது அவர்களின் உரிமை, அதை நிறைவேற்றுவது அரசின் கடமை.

அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர் எட்டி உதைக்கப்பட்டது மனவேதனை அளிக்கிறது. கடவுளுக்கு நிகராக வணங்க வேண்டிய விவசாயிகளை இவ்வாறு களங்கப்படுத்துவது கொடுமையான ஒரு விஷயம். சம்பந்தப்பட்ட நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் கண்ணீர்

போதிய திட்டமிடுதல் இல்லாமல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்டா பகுதி விவசாயிகள் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கண்ணீர் வடித்து வருகின்றனர். தான் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறிவந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கும்பகர்ணனை போல் மாறிவிட்டார்.

இந்தியா கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிக்க முற்பட்டபோது, அரவிந்த் கெஜ்ரிவால் போல் தி.மு.க.வும் தனது கோரிக்கையை முன்வைத்து காவிரியில் உரியநீரை பெற்று இருக்க வேண்டும். அதைத் தவறவிட்ட நிலையில், டெல்டா விவசாயிகளின் இந்த கண்ணீர் நிலைக்கு காரணம் தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தான். ஆனால் அவர் விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாமல் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story