தொண்டர்கள் ஆதரவோடு அ.தி.மு.க. சோதனைகளை வென்று சாதனை படைக்கும் -எடப்பாடி பழனிசாமி


தொண்டர்கள் ஆதரவோடு அ.தி.மு.க. சோதனைகளை வென்று சாதனை படைக்கும் -எடப்பாடி பழனிசாமி
x

தொண்டர்களின் ஆதரவோடு அ.தி.மு.க. சோதனைகளை வென்று சாதனை படைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் 72 நாட்களுக்கு பிறகு அவர் நேற்று தலைமை அலுவலகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 11.40 மணிக்கு தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஒற்றை இருக்கை

அப்போது, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொன்னையன், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வளர்மதி, கோகுல இந்திரா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர், அங்குள்ள தனது அறைக்குள் சென்று இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கான ஒற்றை இருக்கையில் அமர்ந்தார். முன்பு இந்த அறையில் 2 இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தற்போது அது ஒற்றை இருக்கையாக மாற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அலுவலகத்தின் தரைத்தளத்திற்கு வந்து கடந்த ஜூலை 11-ந்தேதி சூறையாடப்பட்டதில் சேதம் அடைந்த அறைகளை பார்வையிட்டார்.

தலைமை அலுவலகம் எங்களுக்கு...

தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர், அமைப்பு செயலாளர்கள் என பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி கட்சி தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று தலைமைக்கழகம் வந்து உள்ளோம். இந்த நேரத்தில், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போது, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், கோர்ட்டுக்கு சென்ற பிறகுதான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்து தடயங்களை சேகரித்துச்சென்று உள்ளனர். 32 ஆண்டு காலம் ஆண்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகம் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டது குறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தி.மு.க. அரசின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்து உள்ளது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

மீண்டும் அ.தி.மு.க. அரசு

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் சோதனை ஏற்பட்டது. ஆனால், தொண்டர்களின் ஆதரவோடு அ.தி.மு.க. அந்த சோதனைகளை வென்று சாதனை படைத்தது. அதுபோல இப்போதும் சாதனையாக மாறும். அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைப்போம் என்பதே எங்கள் சபதம் மற்றும் லட்சியம்.

அ.தி.மு.க. பிளவுப்படவில்லை. ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எப்படி ஏற்க முடியும்?

ஓ.பன்னீர் செல்வம், மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர் கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது போல வந்து கழகத்தின் தலைமை அலுவலகத்தை உடைத்தார். இதனை நாட்டு மக்கள் பார்த்துள்ளனர். இப்படிப்பட்டவர்களை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்?

அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 2,663 பொதுக்குழு உறுப்பினர்களில் 96 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே, சட்டரீதியாக எதுவும் செய்துவிட முடியாது.

பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர்

ஓ.பன்னீர்செல்வம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறுபவர். பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர்.

தி.மு.க.வால் அ.தி.மு.க. தொண்டனைக் கூட அசைக்க முடியாது. தேர்தலுக்கு முன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். இதுவரை ரத்து செய்யப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு.

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்குவது என்றால் அது தி.மு.க. கட்சிக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

போதை பொருள் மாநிலம்

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, செயின் பறிப்பு அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. உளவுத்துறை நினைத்தால் போதைப்பொருள் தமிழகத்துக்குள் வருவதை கட்டுப்படுத்தலாம். ஆனால், தி.மு.க.வினரே போதைப்பொருட்களை விற்பனை செய்வதால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கு சீரழிந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின்

வாசல் படியை 3 முறை தொட்டு வணங்கிய எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 27-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன்பிறகு, ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 72 நாட்களுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி வாசல் படியை 3 முறை தொட்டு வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.

விழாக் கோலம்

தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் பூசணிக்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

டி.டி.கே. சாலையில் இருந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வரை ஆங்காங்கே மேடை அமைத்து கரகாட்டம், பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம் என மாவட்டம் வாரியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால், நீண்ட நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

'எங்கள் சாமி'

எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய வருகையையொட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவாயிலில் வாழை மரம், கருப்பு, வெள்ளை, சிவப்பு பலூன் அலங்காரத்துடன் ''அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வருகை தரும், 'எங்கள் சாமி எடப்பாடி பழனிசாமி' " என முகப்பு பேனர் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story