கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்கள்
மானாமதுரையில் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்களால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மானாமதுரை
மானாமதுரையில் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் வாலிபர்களால் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
போதை பழக்கம்
மானாமதுரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் புகையிலை பொருட்கள், மது மற்றும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர்களும், சிறுவர்களும் பயங்கர ஆயுதங்களால் இரவு நேரத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட போதையில் வடமாநில இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் அச்சம்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகை ஆற்று பகுதியில் நடந்து சென்ற 4 பேரை சிலர் போதையில் வாளால் வெட்டினர். இவ்வாறு தொடர்ந்து போதையில் அட்டகாசத்தில் ஈடுபடும் மர்ம கும்பலால் மானாமதுரை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், இரவு நேரத்தில் போலீசார் அதிகமாக ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை, இதன் காரணமாகவே கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது, குற்ற செயல்களும் அதிகமாக நடக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, மானாமதுரை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்கவும், இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.