மனைவியுடன் கள்ளத்தொடர்பு: கொத்தனாரை கொலை செய்த தொழிலாளி கைது


மனைவியுடன் கள்ளத்தொடர்பு: கொத்தனாரை கொலை செய்த தொழிலாளி கைது
x

தோகைமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் கொத்தனாரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கரூர்

கொத்தனார் கொலை

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கொத்தனார். இவருக்கும், திருச்சி மாவட்டம், சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த சுகந்தி (37) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்தநிலையில் செல்வத்திற்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகந்தி தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

விசாரணை

இதனால் செல்வம் தனது 2 மகன்களுடன் தனது தாய் சிங்காரியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி செல்வத்தை மர்மநபர்கள் கொலை செய்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி சென்றனர்.

இந்த கொலை தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, சுக்காம்பட்டியில் உள்ள குடிதெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான வெள்ளைச்சாமி (40) என்பவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

கள்ளத்தொடர்பு

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த விவரம் பின்வருமாறு:-

சுக்காம்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி சட்ட விரோதமாக மது விற்று வந்துள்ளார். இதனால் செல்வம் அடிக்கடி வெள்ளைச்சாமியிடம் சென்று மது வாங்கி வந்துள்ளார்.

அப்போது செல்வத்திற்கும், வெள்ளைச்சாமி மனைவி ஜெயமணி (35) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் செல்வத்தை, வெள்ளைச்சாமி பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லையாம்.

கைது

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி சம்பவத்தன்று வீட்டின் அருகே தூங்கி கொண்டிருந்த செல்வத்தை அடித்து கொன்று, கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளைச்சாமி கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் வெள்ளைச்சாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story