பெருமாள் கோவில்களில் முன்னேற்பாடு பணி தீவிரம்


பெருமாள் கோவில்களில் முன்னேற்பாடு பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

பெருமாள் கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பக்தர்கள் நம்பப்படுவதால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகள்தோறும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்வது வழக்கம். மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில், காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில், சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஏராளமான பெருமாள் கோவில்கள் உள்ளன.

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏராளமானோர் வர உள்ளதால் பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கட்டைகள் கொண்டு தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாள் தங்க அங்கியில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார்.

2-வது சனிக்கிழமை அன்று ரத்தி அங்கியிலும், 3-வது சனிக்கிழமை அன்று சிறப்பு அலங்காரத்திலும், 4-வது சனிக்கிழமை அன்று முத்தங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி தலைமையில் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரியக்குடி, திருக்கோஷ்டியூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.



Next Story