விநாயகர் சிலைகளை கரைக்க முன்னேற்பாடு பணிகள்
வேலூர் மற்றும் குடியாத்தத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. வேலூரில் நடந்த பணிகளை டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.
சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வேலூர் பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் இன்று (புதன்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி ஏரிக்கரையோர பாதையை சீரமைப்பது, ஏரியில் சிலைகளை கரைக்க பள்ளம் தோண்டி தண்ணீர் நிரப்புதல், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிலைகளை கரைப்பதற்கு பொக்லைன் எந்திரம், கிரேன் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கும்படி மேயர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், உதவிகமிஷனர் சுப்பையா, மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
டி.ஐ.ஜி. ஆய்வு
இதேபோன்று வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி சதுப்பேரி ஏரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஊர்வல பாதையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் கேட்டறிந்தார்.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் கோட்ட இந்து முன்னணி தலைவர் மகேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தார்கள்.
குடியாத்தம்
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில்கரைக்கப்படுகிறது.
சிலகள் கரைக்கப்பட இருக்கும் பகுதியில் நேற்று மாலை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் சம்பத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விநாயகர் சிலைகளை கரைக்க வரும் பக்தர்கள் பாதுகாப்பாக கரைக்க தடுப்புகள் அமைப்பது, மின்விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், போலீஸ் அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.