ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு


ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்:  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு
x

ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு போனது.

ஈரோடு

ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகன் (வயது 58). இவர் ஈரோடு சம்பத்நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கரூரில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் முருகன் நேற்று காலையில் வழக்கம்போல் ஈரோட்டில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பகல் 12 மணி அளவில் அவரது மகன் ஸ்ரீகாந்த் தந்தையை பார்ப்பதற்காக வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. மேலும், அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. உடனடியாக அவர் தந்தை முருகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த வைர நகைகள், 4 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வேலைக்கு சென்ற பிறகு நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த வைர, தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாக இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைர, தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் வீட்டிலேயே திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story