வக்கீலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
வக்கீலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை
கோவையில் பேட்டரி வாங்கியபோது கூடுதல் தொகை வசூலித்ததால் வக்கீலுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்பொருள் அங்காடிக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பேட்டரிக்கு கூடுதல் விலை
கோவை வடவள்ளி அருகே உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் ரவீந்திரநாத். வக்கீலான இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியில் (டிப்பார்ட் மெண்டல் ஸ்டோர்) பேட்டரி வாங்கினார்.
அந்த பேட்டரியின் விலை ரூ.16 தான். ஆனால் அதற்கு அந்த பல்பொருள் அங்காடியில் ரூ.41 வசூலிக்கப்பட்டது. பேட்டரிக்கு கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்பட்டதுஇந்த விலை உயர்வு குறித்து நவீந்திரநாத் அந்த பல்பொருள் அங்காடியில் கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை.
கோர்ட்டில் வழக்கு
எனவே ரவீந்திரநாத் இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ரூ.16 விலை கொண்ட பேட்டரிக்கு என்னிடம் ரூ.41 வாங்கினார்கள். இது குறித்து கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை.
எனவே எனக்கு இழப்பீடாக ரூ.1 லட்சமும், மனஉளைச்சலுக்கு ரூ.50 ஆயிரமும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேல், பேட்டரிக்கு கூடுதல் தொகை வசூலித்தது அந்த பல்பொருள் அங்காடியின் சேவை குறைபாடு ஆகும்.
இழப்பீடு வழங்க உத்தரவு
எனவே பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத்துக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரமும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.25 ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் மனுதாரர் சார்பில் வக்கீல் வனிதா ரோசி ஆஜரானார்.