போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை வக்கீல் சங்க முன்னாள் செயலாளர்கள் காமராஜ், செந்தில் ஆகியோர் தலைமையில் ரமேஷ், கிருஷ்ணகுமார், ஜெயசிங், செந்தில்குமார், சீதா குத்தாலிங்கம் உள்பட ஏராளமான வக்கீல்கள் நேற்று பிற்பகலில், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கமிஷனர் அலுவலக பிரதான நுழைவு வாசலில் திடீரென்று தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, இன்ஸ்பெக்டர்கள் காசி பாண்டியன், ஹரிகரன் ஆகியோர் விரைந்து வந்து, வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மனு
பின்னர் அவர்கள் துணை கமிஷனர் அனிதாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
அனு பிரவின் நெல்லை கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். கடந்த 11-ந்தேதி அனு பிரவினை, விஜய் மற்றும் ரீனா என்பவரும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளனர். இந்த வழக்கில் விஜய் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றொரு பெண் கைது செய்யப்படவில்லை. இதனால் சாட்சிகள் மிரட்டப் படுகிறார்கள். எனவே உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். வக்கீல் அனு பிரவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.
முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேசுவரன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.