பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா?


பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா?
x
திருப்பூர்


மடத்துக்குளம் பகுதியில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்கு பிடிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்யக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள்

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் அமைக்கப்படும் பிரம்மாண்ட விளம்பரப்பதாகைகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை விபத்துக்கள் நடைபெறும் போதும் விளம்பரப் பதாகைகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் தொடர் நடவடிக்கைகள் இல்லாததால் விளம்பரப் பதாகைகளால் ஏற்படும் விபத்துக்கள் தொடர் கதையாகவே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற விபத்துக்குப் பிறகு விளம்பரப் பதாகைகளை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனுமதியில்லாமல் விளம்பரப் பதாகைகள் அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேகமான காற்று

இந்தநிலையில் மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விளம்பரப் பதாகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் தற்போது காற்றின் வேகம் அதிக அளவில் காணப்படுகிறது. காற்றின் வேகத்தால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் மடத்துக்குளம் நால்ரோடு உள்ளிட்ட பல இடங்களில் விளம்பரப் பதாகைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட விளம்பர பதாகைகள்

இதுதவிர சாலை ஓரங்களில் உள்ள விளைநிலங்களுக்கு மத்தியில் பிரம்மாண்டமான விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினர் பலரும் விளம்பரப் பதாகைகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விளைநிலங்களின் உரிமையாளரின் அனுமதி பெற்று சில தனியார் விளம்பர நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இரும்புக்கம்பிகளைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான விளம்பர பலகைகளை நிறுவுகின்றனர். அதில் வணிக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் வாடகை செலுத்தி விளம்பரம் செய்கிறார்கள்.

உறுதித்தன்மை கேள்விக்குறி

அதேநேரத்தில் இந்த விளம்பர பதாகைகளில் அனுமதி பெற்ற நாள், அனுமதி காலம் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுவதில்லை.இதனால் நீண்ட நாட்கள் ஆன விளம்பர சட்டங்கள் துருப் பிடித்து உறுதித்தன்மை குறையும் அபாயம் உள்ளது. அத்துடன் பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்கும் வகையில் அவை உறுதித் தன்மையுடன் உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுபோன்ற நிலையிலுள்ள விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே அவற்றின் உறுதித்தன்மை மற்றும் அனுமதி காலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றவும், மீண்டும் அமைக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story