விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு அதன் உரிமையாளர்களே பொறுப்பு

காங்கயத்தில் நகர பகுதியில் வைக்கப்படும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேனர்கள் அகற்றம்
காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு அதன் உரிமையாளர்களே பொறுப்பு
காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்..