அடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை - எந்திரம் இறக்கும் பணி தொடக்கம்


அடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை - எந்திரம் இறக்கும் பணி தொடக்கம்
x

அடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக சுரங்க ரெயில் நிலையத்திற்குள் எந்திரம் இறக்கும் பணி நேற்று தொடங்கியது.

சென்னை

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் பால் பண்ணை-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடந்து வருகிறது.

இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம், கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றது. தொடர்ந்து சேத்துப்பட்டில் ஜூன் இறுதியிலும், மெரினா கடற்கரையில் ஆகஸ்டு மாதமும் சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.

குறிப்பாக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ என 2 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் நடுவில் சேத்துப்பட்டு ஏரி வருகிறது. இந்த ஏரியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 2 இடங்களில் 120 அடி ஆழத்தில் (35 மீட்டர்) 2 குழிகள் தோண்டி மண் ஆய்வுப்பணி நடந்தது. அதில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரி ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, மண்ணின் உறுதி தன்மை அறியப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சுரங்கம் தோண்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கும் பணியில் எல் அண்டு டி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள சேத்துப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு வரை 800 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதியாகும். இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது.

இந்த எந்திரம் சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள சேத்துப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு உள்ளே இறக்கும் பணி நேற்று தொடங்கியது. 2 ராட்சத கிரைன்கள் மூலம் சுரங்கத்திற்கு உள்ளே இறக்கப்பட்டுள்ள சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் உள்ளே ஒரே தொகுதியாக பொறுத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கி 15 நாட்களில் முடிவடையும்.

அதற்கு பிறகு ஜூன் மாதம் இறுதியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இது ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பை நோக்கி செல்லும்போது சுரங்கப்பாதையின் ஆழம் 49 அடியாக குறையும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story