போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை-பொதுமக்கள் சாலைமறியலால் பரபரப்பு


போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை-பொதுமக்கள் சாலைமறியலால் பரபரப்பு
x

திருக்குறுங்குடி அருகே சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக பொதுமக்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக பொதுமக்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி சிலை சேதம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூரில் ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. நேற்று காலையில் கோவில் வளாகத்தில் உள்ள மாசான சுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா மலையடிபுதூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 48) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதில், அதே ஊரில் பருத்திவிளை தெருவைச் சேர்ந்த ராமையா மகன் அய்யப்பன் (35) என்பவர், சாமி சிலையை சேதப்படுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சாலை மறியல்

சாமி சிலையை சேதப்படுத்திய நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மலையடிபுதூரில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வள்ளியூர்- சேரன்மாதேவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே, திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தற்கொலை

இதற்கிடையே, போலீசார் தன்னை தேடுவார்கள் என்று கருதிய அய்யப்பன், போலீசாரின் விசாரணைக்கு பயந்து நேற்று காலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் விரைந்து சென்று, இறந்த அய்யப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறுங்குடி அருகே சாமி சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் போலீசார் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story