10 நாட்களுக்குபிறகு அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு: ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மாயம்


10 நாட்களுக்குபிறகு அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு: ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மாயம்
x

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ‘சீல்’ அகற்றப்பட்டதால் 10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது.

அதேநேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் - கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் வருவாய்த்துறை அதிகாரிகள் 145-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அ.தி.மு.க. அலுவலகத்தை 'சீல்' வைத்து பூட்டினர். மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்? என்பதை மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24-ந்தேதி (நாளை மறுதினம்) ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களது வக்கீலோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமி வசம்

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சீலை அகற்றிவிட்டு அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு நகலை இணைத்து அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவியை மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மயிலாப்பூர் தாசில்தாரிடம் நேற்று முன்தினம் கடிதம் அளிக்கப்பட்டது.

எனவே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் 'சீல்' நேற்று முன்தினமே அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு தீர்ப்பு நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், வருவாய்த்துறை அதிகாரிகளால் சீலை உடனடியாக அகற்ற முடியவில்லை.

'சீல்' அகற்றம்

இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சி.வி.சண்முகம் எம்.பி., அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் நேற்று காலை 10.45 மணியளவில் வந்தனா். மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் காலை 10.55 மணியளவில் வந்தனர். இதையடுத்து சீலை அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கின.

கட்சி அலுவலகத்தின் வெளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த 'சீல்' முதலில் அகற்றப்பட்டு 10 நாட்களுக்கு பிறகு அலுவலகம் திறக்கப்பட்டது. பின்னர் உள் நுழைவுவாயில், பின் நுழைவுவாயில், அலுவலக மேலாளர் அறை ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 'சீல்' அடுத்தடுத்து அகற்றப்பட்டு திறக்கப்பட்டன.

அதன்பின்னர் அலுவலக சாவியை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கி அதற்கான ஆவணங்களில் அதிகாரிகள் கையொப்பம் பெற்றனர். 'சீல்' அகற்றும் நடைமுறைகள் முடிவடைந்ததும் காலை 11.20 மணியளவில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

கட்சி அலுவலகம் சின்னாபின்னம்

இதையடுத்து சி.வி.சண்முகம், மகாலிங்கம் ஆகியோர் பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு அ.தி.மு.க. அலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டனர். அப்போது கம்ப்யூட்டர் அறை, அக்கவுண்ட் அறை கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன.

அந்த அறைகளில் இருந்த ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் சிதறி கிடந்தன. பீரோ கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டு புரட்டி போடப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் நாற்காலிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருந்தன.

கூட்ட அரங்கத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் குப்பை போன்று சிதறி கிடந்தது. கட்சி அலுவலகமே சின்னாபின்னமாக காட்சி அளித்தன. இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கின.

விலையுயர்ந்த பொருட்கள் மாயம்

பின்னர் அலுவலக மேலாளர் மகாலிங்கம் கூறியதாவது:-

எப்படி இருந்த கட்சி அலுவலகம் இன்றைக்கு இப்படி சின்னாபின்னமாகி உள்ளது. கட்சி அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள அறையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளி செங்கோல், வேல் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளது. என்னென்ன பொருட்கள், ஆவணங்கள் மாயமாகி இருக்கிறது? என்ற பட்டியலை இடைக்கால பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) விரைவில் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. அலுவலகத்தில் மாயமாகி உள்ள பொருட்கள் எவை? என்பது குறித்து மகாலிங்கம் மற்றும் ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story