17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய எம்.சி.பள்ளி ஏரி


17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய எம்.சி.பள்ளி ஏரி
x

தொடர் மழையால் 17 ஆண்டுகளுக்கு பிறகு எம்.சி. பள்ளி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

எம்.சி.பள்ளி ஏரி நிரம்பியது

கிருஷ்ணகிரி அருகே உள்ள எம்.சி.பள்ளி ஊராட்சியில் கரகூர், கோதிக்குட்லப்பள்ளி, விவேக் நகர், பி.சி.புதூர், மாட்டுஓணி, பி.சி. ராமன்கொட்டாய் உள்பட 12 கிராமங்கள் உள்ளன. எம்.சி. பள்ளி கிராமத்தில் இருந்து வள்ளுவர்புரம் செல்லும் சாலையில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு ஆந்திரா மாநில எல்லையோரங்களில் பெய்யும் மழை மற்றும் ஏக்கல்நத்தம் மலையில் இருந்து வரும் மழைநீர், நாரலப்பள்ளி, பெரியசக்னாவூர், சிந்தகம்பள்ளி, கோதிக்குட்லப்பள்ளி வழியாக வருகிறது. தற்போது பெய்த தொடர் மழை காரணமாக எம்.சி. பள்ளி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

விவசாய பணிகள் புத்துயிர்

எம்.சி.பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் பலர் கூலி வேலைக்காக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றனர். இந்த ஆண்டில் பரவலாக பெய்த மழையால் கூலி வேலைக்கு சென்ற பலர், மீண்டும் விவசாய பணிகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், தற்போது அங்கானமலை மற்றும் ஏக்கல்நத்தம் மலை பகுதிகளில் பெய்த கனமழையால் 17 ஆண்டுகளுக்கு பிறகு எம்.சி.பள்ளி ஏரி நிரம்பி உள்ளது.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வறண்ட காணப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதால், விவசாயிகள் மலர்கள், நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எம்.சி.பள்ளி ஏரி நிரம்பி வழிந்தோடும் தண்ணீர், கால்வாய் வழியாக எலுமிச்சங்கிரி, மல்லிநாயனப்பள்ளி ஏரிகளுக்கு செல்கிறது. விவசாய பணிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story