4 மாதங்களுக்கு பிறகு சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது
4 மாதங்களுக்கு பிறகு சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது
வால்பாறை
4 மாதங்களுக்கு பிறகு சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது.
சோலையாறு அணை
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வந்ததால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஜூலை 10-ந் தேதி சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது.
இந்த நிலையில் தொடர்ந்து வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 10-ந் தேதி வரை பெய்தது. இதனால் தொடர்ந்து சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 118 நாட்களாக முழு கொள்ளளவில் இருந்து வந்தது.
மின் உற்பத்தி
இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் கேரளாவிற்கு சென்று கொண்டிருப்பதால் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்வதை நிறுத்தும் வகையில் சோலையாறு மின் நிலையம் -1 இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டு விட்டது.
159 அடியாக குறைந்தது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சோலையாறு மின் நிலையம் -2 இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் உற்பத்திக்குப்பின் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு 410 கன அடித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை அவ்வப்போது லேசான மழையாக பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் கிடைக்காத நிலையில் சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து சோலையாறு அணையின் நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது.