42 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கிய பெண்


42 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கிய பெண்
x

தனக்கு சுகபிரசவம் பார்த்த ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு 42 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 ஆயிரம் நிதியை பெண் ஒருவர் வழங்கினார்.

தஞ்சாவூர்

பிரசவ வலி

தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மகப்பேறு சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

கடந்த 1981-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த எழிற்செல்வி என்பவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அய்யம்பேட்டை மற்றும் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றபோது, எழிற்செல்விக்கு அபாய கட்டத்தில் இருப்பதால், அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் கூறிவிட்டனர்.

பெண் குழந்தை பிறந்தது

இதையடுத்து உறவினர்களும் பெற்றோர்களும் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் எழிற்செல்வியை பிரசவத்திற்காக சேர்த்தனர். அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு எழிற்செல்வி தனது கணவருடன் டெல்லி அருகே உள்ள கங்கோத்ரி பகுதிக்கு பணி நிமித்தம் காரணமாக சென்று விட்டார். பின்னர் தனது மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இருந்தாலும் தனக்கு பிரசவத்தின்போது மறுபிறவியை கொடுத்த தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஏக்கம் எழிற்செல்விக்கு இருந்து கொண்டிருந்தது.

ரூ.50 ஆயிரம் நிதி

இந்தநிலையில் எழிற்செல்வி தனது சகோதரர் பாலசுப்பிரமணியன் மூலம் ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனிடம் நேற்று ஒப்படைத்தார். இது குறித்து முதல்வர் பாலாஜிநாதன் கூறும்போது, எனது மருத்துவர் சேவையில் முதன்முறையாக இப்படி ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே இதுபோன்று நடந்தது இல்லை. தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மாதந்தோறும் 1000 முதல் 1,400 பிரசவங்கள் நடக்கிறது. 350 முதல் 420 குழந்தைகள் தீவிர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். எடை குறைவான குழந்தைகள் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை ஆண்டுதோறும் அனுமதிக்கப்படுகின்றனர்.

எடை குறைவான குழந்தைகள்

கடந்த ஆண்டு எடை குறைவான குழந்தைகளின் உயிர் வாழ்தல் சதவீதம் 80.53 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு எடை குறைவான குழந்தைகளின் உயிர் வாழ்தல் சதவீதம் 86.2 சதவீதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர்கள் செல்வம், சுப்புராமன், மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறை மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story